Poigaiyazhwar
பொய்கையாழ்வார்

பொய்கையாழ்வார் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சித்தார்த்தி ஆண்டு ஐப்பசித் திங்கள், திருவோண நட்சத்திரத்தில் திருமாலின் பாஞ்சசன்யம் என்னும் சங்கின் அம்சமாக காஞ்சிபுரத்தில் உள்ள திருவெஃகா என்னும் தலத்திலுள்ள திருக்குளத்தில் தாமரைப்பூவின் மேல் அவதரித்தார்.

பொய்கையாழ்வாரும், இவரின் சம காலத்தவர்களான பூதத்தாழ்வாரும், பேயாழ்வாரும் பல திவ்ய தேசங்களை தரிசனம் செய்து பின்னர் ஒருவருக்கொருவர் அறியாமலேயே திருக்கோவிலூரில் உள்ள உலகளந்தப் பெருமாளை தரிசனம் செய்ய சென்றனர். கனமழை பெய்யும் ஓர் இரவில் அங்குள்ள மிருகண்டு முனிவரின் ஆசிரமத்தை முதலில் அடைந்த பொய்கையாழ்வார் தங்க இடம் கேட்க, முனிவர் அங்கிருந்த இடைக்கழியைக் காட்டி, "இங்கு ஒருவர் படுக்கலாம்" என்றார். சிறிது நேரத்தில் பூதத்தாழ்வார் அங்கு வந்து முனிவரிடம் தங்க இடம் கேட்க, அவர் இங்கு "இருவர் இருக்கலாம்" என்று இடைக்கழியைக் காண்பித்தார். அங்கிருந்த பொய்கையாழ்வாரிடம் நாராயணனின் பெருமையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது பேயாழ்வார் அங்கு வந்து முனிவரிடம் தங்க இடம் கேட்டார். அதற்கு முனிவர், "இங்கு மூவர் நிற்கலாம்" என்று இடைக்கழியைக் காட்டினார். மூவரும் நின்றுக் கொண்டு பெருமாளின் பெருமைகளைப் போற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது நான்காவதாக ஒருவர் புகுந்து நெருக்குவதுப் போல் தோன்றியது. இருளில் நெருக்க உணர்வைக் கண்டு திகைத்த ஆழ்வார்களின் மத்தியில் ஸ்ரீமந் நாராயணனே தனது திவ்ய சொரூபத்தைக் காட்டி அருளினார்.

மூன்று ஆழ்வார்களும் செந்தமிழால் பெருமாளைப் நூறு பாடல்களால் அந்தாதி பாடிப் போற்றினர். முதன்முதலில் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம் இதுவேயாகும். பொய்கையாழ்வார் தமது முதல் பாடலாக "வையம் தகளியா வார்கடலே நெய்யாக" என்று பாடினார். இந்த நூறு பாடல்களும் "முதல் திருவந்தாதி" என்று வழங்கப்படுகிறது.

முதல் திருவந்தாதி

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.